ராஜபாளையம், மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 May 2023

ராஜபாளையம், மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பூக்குழி திருவிழா அதிவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரை பூக்குழி திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்று வந்தது. 

தினமும் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 


பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பூக்குழி திடலில் தீ வளர்க்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்பு, காப்புகட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடி பூக்குழி இறங்கினர். இதில் பல பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், சில பக்தர்கள் குழந்தைகளை சுமந்தபடியும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்திரை பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள் என்று கோவில் நிர்வாகிகள் கூறினர். 


பக்தர்கள் பூக்குழி இறங்குவதை பார்ப்பதற்காக ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். சித்திரை பூக்குழி திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad