சாத்தூர் அருகே, 'இரும்பு பெண்மணி' திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 November 2022

சாத்தூர் அருகே, 'இரும்பு பெண்மணி' திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, உப்பத்தூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'இரும்பு பெண்மணி' திட்ட மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், 'இரும்பு பெண்மணி' திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய, இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 


மேலும் மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களை சந்தித்து அவர்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்புகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, தமிழக அரசு மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், கர்ப்பிணி பெண்களுக்கு சீரிய மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. 


கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைபாடு மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும் வகையில் 'இரும்பு பெண்மணி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான பெண்கள், ஆரோக்கியமான குழந்தைகள், ஆரோக்கியமான தமிழகம் என்ற நோக்கத்தில் இந்தத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad