சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை; மலைப் பகுதியில், மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 December 2022

சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை; மலைப் பகுதியில், மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே மலைக் கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். 


கடந்த ஐப்பசி மாத அமாவாசை, பௌர்ணமி மற்றும் கார்த்திகை மாத அமாவாசை தினங்களில், மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக பக்தர்கள் பாதுகாப்பு கருதி சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெரியளவில் மழை பெய்யாமல் இருந்ததால், இன்று கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷம் வழிபாடுகளுக்காக சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். 


இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோவிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி, இன்று வளர்பிறை பிரதோஷம் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர். 


இன்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நம்பிக்கையுடன் வந்த பக்தர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நாளை கார்த்திகை மகாதீபம், நாளை மறுநாள் பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad