விருதுநகரில் சோக சம்பவம் கடன் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 December 2022

விருதுநகரில் சோக சம்பவம் கடன் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை.


விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ். தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (41). இவரது மனைவி அருணா (37). இவர்களுக்கு அர்ச்சனாஸ்ரீ (17), மேகாஸ்ரீ (14) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கார்த்திக்ராஜா, தான் குடியிருக்கும் பகுதியிலேயே பெயிண்ட் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். கடந்த சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். வியாபாரம் தொடர்ந்து நஷ்டமடைந்ததால் கடும் மன வருத்தத்தில் இருந்து வந்தார். தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாத நிலையில், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் விரக்தியில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று இரவு மகள்கள் இருவரையும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு கார்த்திக்ராஜாவும், அருணாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். இன்று காலை தங்களது வீட்டிற்கு வந்த கார்த்திக்ராஜாவின் மகள்கள், கதவு பூட்டிக் கிடந்ததால் நீண்ட நேரமாக தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் அருகில் வசிப்பவர்கள் இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து திறந்தனர். வீட்டிற்குள் கார்த்திக்ராஜாவும், அருணாவும் விஷம் குடித்து இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 


அப்பா, அம்மா இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து அவர்களது மகள்கள் இருவரும் கதறி அழுதனர். போலீசார் கார்த்திக்ராஜா, அருணா உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


கடன் பிரச்சினையில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad