'108' வைணவ திருத்தலங்களில் மிக சிறப்பு பெற்ற, திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும். பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது. இன்று மாலை ஸ்ரீஆண்டாளுக்கு தாய் வீட்டார் பச்சை காய்கறிகள் சீதனமாக வழங்கும் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
பகல் பத்து உற்சவத்தின் போது தினமும் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். மார்கழி மாதத்தின் மிகப்பிரசித்தி பெற்ற சொர்க்க வாசல் திறப்பு என்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment