சாத்தூர் அருகே, பிறந்த 3வது நாளில் குழந்தை திடீர் உயிரிழப்பு; மருத்துவமனை முன்பு உறவினர்கள் முற்றுகை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 11 October 2022

சாத்தூர் அருகே, பிறந்த 3வது நாளில் குழந்தை திடீர் உயிரிழப்பு; மருத்துவமனை முன்பு உறவினர்கள் முற்றுகை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, எஸ்.பி.எம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவரது மனைவி முத்துக்கனி (30).  இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்பு முத்துக்கனி மீண்டும் கருத்தரித்திருந்தார். கடந்த வெள்ளி கிழமையன்று, பிரசவத்திற்காக தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட முத்துக்கனிக்கு சுகப்பிரசவம் ஆகாத நிலையில், சனி கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருந்த நிலையில் நேற்று காலையில், குழந்தை திடீரென்று இறந்து போனதாக கூறப்படுகிறது. 


அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த குழந்தை திடீரென்று இறந்து போன சம்பவம் பாஸ்கரன், முத்துக்கனி குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிறந்து 3 நாளான ஆண் குழந்தை எப்படி இறந்தது என தெரியாமல், குழந்தையின் உறவினர்கள் கதறி அழுதனர். பிரசவித்த பெண்ணிற்கும், பிறந்த குழந்தைக்கும் மருத்துவர்கள் கண்காணிப்பு இல்லாமல், செவிலியர்கள் மட்டுமே மருத்துவம் பார்த்ததாகவும், அவர்கள் சரிவர கவனிக்காததால் ஆரோக்கியமாக பிறந்த குழந்தை இறந்து போனதாகவும், குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். 

மேலும் குழந்தையின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை, உடற்கூறாய்வு செய்வதற்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பதற்றமான சூழல் இருந்து வருவதால், தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad