சிவகாசி அருகே, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்; கல்வி அதிகாரி நேரில் விசாரணை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 11 October 2022

சிவகாசி அருகே, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்; கல்வி அதிகாரி நேரில் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் 34 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளி சார்பாக நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். 


தங்களை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாததற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜுலியட்ரதி தான் காரணம் என்று கூறி, 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் ஒன்றாக கூடி, தலைமை ஆசிரியையை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது அங்குவந்த தலைமை ஆசிரியை ஜுலியட்ரதி, மாணவர்களின் ஜாதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களை கண்டிக்கும் வகையில் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து நீக்கி மாற்றுச் சான்றிதழும் வழங்கினார். 


தனக்கு எதிராக யாராவது கோஷமிட்டால் அவர்களையும் பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வழங்கி நீக்கி விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம், தலைமை ஆசிரியை குறித்து புகார் மனு கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு, ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி ஞானகௌரி, பேராபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்று, கல்வி அதிகாரி ஞானகௌரி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad