வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் நடைபாதை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் ஊழியர்களுக்கு போனஸ் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
போனஸ் பணம் வாங்கியவுடன் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பட்டாசுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வருவார்கள். நேற்று இரவு நேரத்தில் மழை பெய்ததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இனி வரும் 6 நாட்களில் தீபாவளி பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். இந்த நிலையில் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்து வரும் 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரம், வர்த்தகம், நடைபாதை வியாபாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நடைபாதை வியாபாரத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இருந்தாலும் தீபாவளி பண்டிகை வியாபாரம் நன்றாக நடைபெறும் என்ற நம்பிக்கையில், நடைபாதை வியாபாரிகள் உள்ளனர்.
No comments:
Post a Comment