அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் தீண்டாமையை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் என்ற தலைப்பில் பாஜகவினர் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதில் மாநில பட்டியல் அணித்தலைவர் தடா பெரியசாமி சிறப்பு பேச்சாளராக பங்கேற்க இருந்தார். அதற்காக மேடை அமைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடத்த ஆயத்தமாகினர்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை முதல் இரவு வரை மேடை அமைக்கும் பணிகள் கொடிக்கம்பங்கள் நடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இரவு நேரத்தில் தீடிரென டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் உங்களுக்கு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை உடனடியாக மேடையை அப்புறப்படுத்துமாறு பாஜகவினரிடம் கூறினர்.
ஆனால் அனுமதி மறுத்தது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தரவில்லை இது தொடர்பாக காலையில் பேசி அதன்பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என பாஜகவினர் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்த முயன்றதாக பாஜகவினரை கைது உத்தரவிட்டார். ஆனால் பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் குண்டுக்கட்டாக பாஜக மாவட்டத்தலைவர் பாண்டுரங்கன் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அப்பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடை, கொடிக்கம்பம், பேனர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment