சொத்து தகராறில் அண்ணன் உட்பட 4 பேரை கொலை செய்த, சகோதரி உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 November 2022

சொத்து தகராறில் அண்ணன் உட்பட 4 பேரை கொலை செய்த, சகோதரி உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கணேசன் (40). இவரது மனைவி கலா. இவர்களது மகள்கள் சாந்திபிரியா, கிருஷ்ணவேணி. கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துவிட்டு, ராஜபாளையத்தில் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கணேசனின் தம்பிகள் முருகன் (39), பழனிச்சாமி (37), தங்கை காந்தி (30) ஆகியோருக்கும், கணேசனுக்கும் சொத்து பிரச்சினையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு, கணேசனின் வீட்டுக்குள் நுழைந்த 3 பேரும், கணேசனின் மனைவி கலா சமைத்து வைத்திருந்த உணவில் மயக்க மருந்தை கலந்து வைத்தனர். 

இதனை அறியாமல் உணவை சாப்பிட்ட கணேசன், கலா, சாந்திபிரியா, கிருஷ்ணவேணி ஆகிய 4 பேரும் வீட்டுக்குள் மயங்கி கிடந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்குள் புகுந்த முருகன், பழனிச்சாமி, காந்தி 3 பேரும் சேர்ந்து தங்களது உடன்பிறந்த அண்ணன் உட்பட 4 பேரையும் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி, சொந்த அண்ணன் குடும்பத்தை கொலை செய்ததாக, தங்கை, தம்பிகள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 


இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், சொத்திற்காக உடன்பிறந்த அண்ணனையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்த தம்பிகள் முருகன், பழனிச்சாமி மற்றும் தங்கை காந்தி ஆகிய 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், 89 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 


சொந்த அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தையே சொத்து தகராறில் படுகொலை செய்த தம்பிகள், தங்கை உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

No comments:

Post a Comment

Post Top Ad