விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில், தர்மதுரை திரைப்பட புகழ், தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று உறுதியான ஒன்றாகியுள்ளது. பெருவாரியான வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். அதிமுக கட்சியில் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், திசைக்கு ஒருவராக பிரிந்து கிடக்கிறது. இது தான் உண்மை. இதனை பயன்படுத்தி சிலர் ஆதாயம் தேட வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

அவர்களின் எண்ணம் பலிக்காது. திமுக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர் ஒன்றாக சேர்ந்து நின்றாலும், திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது. காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றியை பெறுவது உறுதி. கடந்த தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.
மற்ற வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்று தான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதனை நிச்சயம் திமுக அரசு செய்யும். மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
No comments:
Post a Comment