விருதுநகர் மாவட்டத்தில், கட்டிடப் பணிகள், பேப்பர் மற்றும் அட்டை மில்கள், நூற்பு ஆலைகள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பீகார், அசாம், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், பல தொழிலாளர்கள் ஆண்டுக்கணக்கில் இங்கேயே தங்கி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து வசிக்கும் தகுதியானவர்களுக்கு, மின்னணு ரேசன் கார்டுகள் வழங்கப்பட இருப்பதாக ,மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், வெளி மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இங்கு தங்கியிருந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு புதியதாக மின்னணு ரேசன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.
ரேசன் கார்டுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் முதலில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து அவர்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள வட்ட வழங்கல் அதிகாரியிடம் உரிய விண்ணப்பத்தை நிரப்பி வழங்க வேண்டும். இதில், தகுதியானவர்களுக்கு மின்னணு ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment