விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு வேளாண் அதிகாரி மாரிமுத்து மற்றும் போலீஸார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்ட போது, ரூ.1.54 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது.
இது குறித்து, ஓட்டுநர் ஜோசப்ராஜாவிடம் விசாரித்த போது, திருப்பூரில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக் கொண்டு, தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இறக்கி விட்டு திரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், ரூ.1.54 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வாட்டாட்சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment